Archive for the ‘கதை’ Category
ஒத்த ரூபாய் தாரும்…
அத்தைப் பையனுக்கு அடுத்த நாள் திருமணம். அலுவலகத்தில் அதிக வேலை. அனைத்தையும் முடித்து விட்டு அதிகாலைக்குள் போய்ச் சேர வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் வரையிலான நெடும் பயணம். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். பணி முடித்து பேருந்து நிலையத்தினை வந்தடைந்தான் வாசு.
புதுசாய் விடப்பட்டிருந்த மாநகராட்சிப் பேருந்து. சொகுசாய் ஏறி அமர்ந்து கொண்டான். அலுவல்கள் அதிகமாகையால் அம்மா! என்றே கண்ணயர்ந்தான். அதிக நேரம் போயிருக்காது. போரூரைத் தாண்டியதும் பேருந்தினுள் ஒரு சலசலப்பு. துன்பத்தை மறந்து தூங்கியவன் திடுக்கிட்டு கண்விழித்தான்.
கரிய நிற காரிகையொருத்தி. கட்டுக்கூடையுடன் கத்திக் கொண்டிருந்தாள். ஒன்றும் புரியாதவனாய் கண்ணைச் சுழற்றியவனுக்கு நடத்துனரும் நாகரிகத்தை கடந்து கொண்டிருந்தது புரிந்தது. காரணம் கேட்டவனுக்கு கிடைத்த பதிலிது.
சொகுசுப் பேருந்தாகையால் சற்றே விலையதிகமாம். பாமரப் பெண்ணவள். அதிகம் படிக்கவில்லை. எண்ணைப் பார்த்து ஏறியவளுக்கு பயணச் சீட்டின் விலை ஏப்பம் அளித்து. ஏன் எனக் கேட்டாள்? நடத்துனர் நவின்ற காரணம் நெஞ்சை சுட்டது. தன் இன்னலை எடுத்தியம்பி போரிட்டாள். ஏறும் போதே சொல்லாது ஏமாற்றி விட்டாய் என்றாள். எதுவும் என் கையில் இல்லை என்றே நடத்துனர் எடுத்துச் சொல்லியும் பலனில்லை.
அதிக வித்தியாசம் இருக்குமோ என்ற ஆர்வத்தில் அவனும் வினவ, என் அடிவயிற்றுக்கு கஞ்சியிடும் ஒரு ரூபாய் என்றே ஓவென்றழுதாள்! ஒன்றுக்கும் உதவாதது ஒரு ரூபாய் என்றே நட்சத்திர ஓட்டல்களில், ஒய்யாரமாய் அவன் சுற்றிய நாட்கள், நின்று நிதர்சனமாய் காட்சியளித்தன.