ஆமாச்சு

ஓர் அத்வைதி..

Archive for the ‘கவிதை?’ Category

கடன் பட்ட நெஞ்சே கலங்காதே!

with 5 comments

அதிகாலை கண்விழித்து
அயராமல் தினமுழைத்து
உண்பது மறந்து உறக்கம் தவிர்த்து
கடன்கழிப்பதை கவனமாய்
மானமென மதித்து செய்யும்
மக்கட் பெருங்கடலே!

கேட்டீரோ நற்செய்தி!
உழைக்க வேண்டாம் இனி
ஊரைச்சுற்றியே நாமும்
ஊதாரியாய் தினமும்
வாங்கிய பணத்தையெல்லாம்
வட்டியோடு சேர்த்து
விழலுக்கிறைக்கலாம் வாரீர்!

கடனடைக்க வேண்டிய
கவலையினி மறப்போம்!
கொடுத்தவனே கழித்துக்கொள்வான்!
மதிநிறை மந்திரியின்
நிதிநிலை அறிக்கை ஆணை!
கஜானாவே காலியாயினும்
கையில் ஓட்டிருக்க
கடன் பட்ட நெஞ்சே கலங்காதே!

—–

விசும்பும் பொய்த்துப் போய்
விம்மி அழுத நீரும் பத்தாது
வரும் காவிரியில் நீரென்றே
வைகைத்து காத்திருந்தாய்!
வராது நிலம் வரண்டால்
விவசாயி நீயென் செய்வாய்!

வாங்கிய கடனை நீயும்
விதையாய் உரமாய் இட்டும்
விளைச்சல் பொய்த்துப்போக
உணவின்றி உறைந்து
உணர்விழந்து நீ பதைத்த நேரம்!

தேனாய் விழுந்த செய்தி!
உன் கடன் தள்ளுபடி!
ஆகா அற்புதம்!
தேற்றிக் கொள் உன்னை!
தெம்பேற்றிக் கொண்டு நீயும்
உறுதிகொண்ட நெஞ்சுடனே
உறங்கச் சென்றிடுவாய் இனி!

நாளை தேர்தல் வருந்நேரம்
மந்தையாய் நீயும் போய்!
மக்களாட்சி மலரச்செய்து
மகுடம் மீட்டுத் தந்த
மகிழ்ச்சியுடன் வீடடைந்து
உணவெங்கே எனக்கேட்டால்!

கடன்கழித்த காரியத்திற்காக
காத்திருக்கமாட்டாயோ ஐவருடம்!
கடைசியாக கடன்
மீண்டும் கழிக்கப்படும்!

குளிரறையில் இருந்துகொண்டு
குறையதிகம் இல்லாதெழுதும்
குறிப்புகளுக்காக மன்னிக்கப்படுவேனாக!
இப்போதைக்கு எம்மால் முடிந்தது
இவ்வளவுதான்!

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

March 14th, 2008 at 5:50 pm

நடிப்பும் நயமும்…

without comments

உலகத்தோடு உறவு கலந்து ஊமைக் குசும்பராய்!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்!!
ஊருக்காக உண்மையைத் திரிப்பார்!
நடிக்கும் நாகரீகம் நாடுபவர்!!
அகமொன்று வைத்து புறமொன்று மொழியாது!
ஊரைப் பார்க்காது உணர்ந்ததை உரைப்போர்!!
அன்புடனே அகிலத்தையும் அணைப்போர்!
நயத்தகு நாகரீகம் வேண்டுபவர்!!

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

June 24th, 2007 at 9:17 am

Posted in கவிதை?

நின்று நிலைத்திட நாம் விடலாமோ!

with 2 comments

தாயும் சேயும் பேசிடக் கேட்டேன்!
தமிழை விடுத்து வேறொரு பாஷை!!
ஏன் எனக் கேட்டேன்! எள்ளி நகையாடி
எக்காளமிட்டு ஏளனமாய் சொன்னாள்!

பரங்கியன் பாஷை பணம் தரவல்லது!
பைந்தமிழ் படித்தால் பரதேசிதான் என்றாள்!!
பணம் தான் பாரில் எல்லாம் என்றால்
பத்தினியும் பரத்தையும் ஒன்றே என்றேன்!

பதறிப் போனாள்! பதில் வரவில்லை!
பாவம் அவள் என்ன செய்வாள்!
பாரில் பலரின் பரிதாப நிலையிது!
பதவியும் பணமும் படுத்தும் பாடு!!

சரித்திரத்தின் சதிகாரர்களால் சிதைக்கப் பட்ட சிந்தனை!
சுதந்திரத்தின் சுவாசம் மறந்து சுகமாய் இருக்கிறது!!
சுயமாய் சிந்திக்கும் ஆற்றலிழந்தே!
சூழ நிற்கும் ஆபத்தை அறிய மறுக்கிறது!!

என்று மடியுமிந்த அடிமையின் மோகம் – என்றே
அன்று பாடிய பாரதியின் தாகம்!
இன்றும் இங்கே நீடிக்கின்றது – இது
நின்று நிலைத்திட நாம் விடலாமோ!

  • Share/Bookmark

Written by ஆமாச்சு

June 5th, 2007 at 8:27 pm

Posted in கவிதை?