Archive for the ‘பொருள்’ Category
பணமெனும் ஈடுபொருள்-2
பணமெனும் ஈடுபொருளின் தொடர்ச்சி…
ம்ம்ம்.. பிட்டுக்கு மண் சுமந்தான்! பிரம்படி பட்டான்! யானைக்காக இரங்கி வந்தான்! இப்படி பக்தர்களுக்காக வந்த பரமனை பார்க்கவும் பணம்! பணமிருந்தா சொகுசா அலேக்கா தூக்கிக் கிட்டு போய் கர்ப்ப கிரகத்துக்குக் கிட்ட வச்சுடுவாங்க! தாயுமானவா! இவர்களிடம் நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்!
இதுல பாருங்க எல்லாரும் கடவுள் கிட்டே இவ்ளோ சிரமப் பட்டு போறது அவர் ஏதோ கொடுப்பாருங்கற ஏக எதிர்பார்ப்புல! கும்பிடுற கோவிலுக்கு ஏதாவது ஆகட்டும் இவங்கல்ல நிறைய பேர் கும்பிடு போட்டுட்டு அடுத்த கோவிலுக்கு போயிடுவாங்க! அவ்ளோ பக்தி! காளையார் கோவிலும் பெரிய மருதுவும் நினைவுக்கு வருது!
இது ரொம்ப உன்னதம்! காசுக்காக காலா காலமா பேசிக்கிட்டுருக்கற மொழியை தூக்கிக் கடாசற வழக்கம்! ம்ம்ம்.. ஒரு மொழில நாக்கச் சுழட்டி வழுக்கி நழுக்கி பேசத் தெரிஞ்சாப் போதும்! சும்மா கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டுது! நாக்குல சனி நாட்டுக்கு பிடிச்சிருக்கோ!
ம்ம்ம்… டாக்டருக்கு ஏன் படிக்கணும்! சாபுடுவேர் இஞ்சினியர் ஆனா போட்ட முதல நாலு வருஷத்துல பாத்துட்டு அப்பறம் எல்லாம் கைமேல இலாபம் தானுங்கோன்னு காலம் மாறிபோச்சுங்க! பணம் ஈடுபொருளா போனதுனால இருக்கற நிலம் புலம் எல்லாத்தையும் வச்சு இதுக்குத் தான் இப்போ ஏகக்கிராக்கி! போட்ட பணம் நிலத்தைவிட இதுல டபுலா அறுவடையாயிடும் பாருங்க!
கடைசில இது வெள்ளைக் காரங்களுக்கு கம்ப்யூட்டரை வச்சு எடுபிடி வேலைப் பார்க்கறதுங்கறது தான் பாதிக்கு மேல் உண்மை! பிரியப்பட்டு செய்யறோம்! காசு கிடைக்குது பாருங்க!
அட.. தேர்தல் வருது! இன்னார் தான் எங்கக் கட்சி வேட்பாளருன்னு மக்களுக்கு தெரிவிக்கவே குறைஞ்சது இருபது இலட்சமாவது தேவைப் படுமே! அதைத் தாண்டி? இப்படி பதவியை முறையாப் பெறுவதற்கும் பணம் ஈடாயிருக்கு! இம்மாஞ் செலவுச் செஞ்சுட்டு வந்து இவங்க சேவை செய்யணும்னு எதிர்பார்க்கறோமே அதைச் சொல்லணும்!
துக்ளக்கில் ஒரு சேதி! சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டாமுன்னு ஊழியர்கள் சிலர் சொல்றாங்களாம்! அட அப்படி என்ன விசுவாசமுன்னு கேட்டா மேற்பதவில, இப்ப இருக்கற அளவுக்கு கிம்பளம் கிடைக்காதாம்! அடப் பாவத்தே!
வெற்றி பெற்றவர் நிறைய காசு சம்பாதிப்பவர்! முதல் நிறுவனம்னா அதிக டர்ன் ஓவர் காமிக்கும் நிறுவனம்! இந்த குவார்ட்டர்ல இவ்ளோ அடிச்சா அடுத்த குவார்ட்டர்ல புல்லா ஏறியிருக்கணும் ன்னு நிறுவனங்களெல்லாம் தங்கள் வெற்றியை தீர்மானிப்பதால் வேலை செய்யறவங்களும் எங்கடா நமக்கு புல்லு கிடைக்கும்னு மாறிக்கிட்டே இருக்காங்க!
இப்படி அடுக்கிட்டே போகலாமுங்க! ஆனா எல்லாம் தெரிஞ்சதுதானே! பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லைன்னு வள்ளுவர் சொன்னது சரிதான்! ஆனா பணமெனும் ஒரு பொருள் மற்ற எல்லாத்தையும் ஈடு செய்கிறதே! அதான்!
பணமெனும் ஈடுபொருள்..
நிற்க. என்னடா ஆரம்பத்துலேயே இப்படியான்னு தோணுதா! பெரிய அளவிற்குப் பொருளாதாரம் எல்லாம் தெரியாது.. இப்போ எழுதப் போறது இன்னிக்கு நம்மைச் சுத்தி நடக்கற நிகழ்வுகளால் ஏற்பட்ட எமது எண்ணங்களின் சிறு தொகுப்பு…
எதையும் ஈடு செய்யும் பொருளாக – பணம். சுகமும் அதுதான்.. சிக்கலும் அதுதான்.. இருந்தா சுகம்.. இல்லாங்காட்டி சிக்கல்… தெரியாததை சொல்லிட்டாண்டான்னு நீங்க நினைக்கறது புரியுது.. பாருங்க புரட்சித் தலைவர் கூட ஒரு பாட்டுல குங்குமம் சிவப்பு.. கூந்தல் கருப்புன்னு பாடியிருக்காரே!
சரி! எதுவுமே பணமெனும் பொருளால் அளவிடப் படுகிறது. காசு காசுன்னு பிரபுதேவா படப் பாடல் நினைவுக்கு வருமே!
எல்லாருக்கும் சேவை செய்யணும் என்ன செய்ய? சேவை செய்யணும்னா பணம் வேணும்! அறக்கட்டளை ஆரம்பிக்கணும்! அதுக்கு பலர்கிட்டேர்ந்து நிதி வாங்கணும்! அதைக்கொண்டு அனாதைகளுக்கு, ஏழைக் குழந்தைகளுக்கு உதவணும்..இப்படி ஒரு எண்ணம்.. இதற்கு நாமும் துணை!
சேவைன்னா இதைத் தாண்டி எண்ணம் போக சிரமப் படுது.. பணம் கொடுத்தா பிரச்சனை எல்லாம் தீர்ந்திடுமென்றொரு பரவலான எண்ணம்.. ஏதாவது நல்லது செய்ய இதுதான் வழின்னு இன்று பலரும் மேற்கொண்டிருக்கும் முறை! இம்முறையில் நல்லது நடக்காமல் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்…
மனசு உறுத்தும் போது இரத்த தானம், முதியோர் இல்லம் இதைத் தாண்டி இன்றைய இளைஞர்கள் போகத் தயாராக இல்லைன்னு சிலர் வருத்தப் படறாங்க!
கொஞ்சம் யோசிச்சதுல எமக்கு ஏற்படும் எண்ணம் இது தான்! இப்படி பணம் கொடுத்து அறக் கட்டளைகள் நடத்தும் இத்தகையோர்களால் சமுதாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்தால் அவைகளின் முன் இந்த சேவைகளால் விளையும் நன்மைகள் அற்பமாகத் தெரியும்!
உதவுவதற்கு இவர்கள் செய்யும் செலவைக் காட்டிலும் பலதையும் பன்மடங்கு விலைக் கொடுத்து வாங்குவதற்கு தயாரானவர்கள்! தகவல் தொழில்நுட்பத் துறையினர் ஒரு வகையில் இத்தகையோரே! நாமும் இந்தத் துறை தான்
இதன் பாதிப்புகளில் சில தான் விலைவாசி உயர்வு.. பண வீக்கம் பணவீக்கம் னு ஏதோ புரியாத பாஷைல திட்டறாங்களே! இதெல்லாம்!
இது அந்த காலத்துல வெள்ளைக் காரன் ஓட்டாண்டி ஆக்கினவனுக்கு மிஷனரி ரொட்டிக் கொடுத்து உதவின மாதிரி.
இதற்கு விதி விலக்குகள் இல்லாமல் இல்லை! அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்!
அடுத்தது! படிக்கணும்! என்ன வேணும்? படிக்கப் போற நிறுவனத்துக்கு கட்ட பணம் வேண்டும்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஐ.ஐ.எம் படிக்க லட்ச ரூபாய்க்கு கீழே குறைச்சா கல்வித் தரம் குறையும்னு கூறினது நினைவுக்கு வருது! ஆக படிக்க முதல் தேவைப் பணம்! ஆர்வமில்லை! பணமில்லைனா கடன் வாங்கு!
சேவை செய்வோர் என்ன செய்யறாங்க! இவ்ளோ பேர் படிக்க இவ்ளோ பணம் கட்டணும்! இந்தப் பணம் இல்லைனா இவங்க படிப்பே பாழாப் போயிடும்! அதனால நீங்க பணம் குடுத்து உதவினீங்கன்னா நல்லா இருக்கும்னு கேக்கறாங்க! வங்கிகள் படிக்க கடன் தருகிறேன்! வாங்கிக்கோன்னு கூவி கூவி கொடுத்து வட்டிக் கறக்குது! ஆக படிக்க பணம் வேணுங்கறத்துக்கு இவங்க எல்லாரும் ஒரு விதத்துல வக்காலத்து! இவங்களுக்கு நாமும் தோள்கொடுக்காமலில்லை!
நோயிருக்கறவன் ஆஸ்பத்திரி போக முடியாது ! பணமிருக்கறவன் தான் போக முடியும்! சிக்கோ ன்னு ஒரு படம் ! இதை நல்லா சொல்லியிருக்கு வாய்ப்பிருந்தா பாருங்க!
கவ்வி மருத்துவம் உணவு மூன்றையும் வியாபாரம் பண்றது நம்ம பாரதீய பண்பாடு இல்லைன்னு பலரின் புலம்பல்! ம்ம்ம்..
கை வைத்தியம் பார்த்துட்டு பதிலுக்கு காசு வாங்கறது பாவம்னு சொல்ற கிராமத்துக் கிழவிகள்! கையெடுத்துக் கும்பிடணும்!
சரி! தானமாகக் கொடுக்கறாங்களோன்னு எட்டிப் பார்த்தா அதுல ஓட்டு, மதம் மாறணும்னு ஏகப் பட்ட எதிர் பார்ப்புகள்! அப்பப்பா!
தொடர்கிறேன்…
உரிமை உனக்கில்லை..
கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! அட! நம்ம நாட்டுல அதிகம் புழக்கத்துல இருக்கிற வாசகம். கீதைல கண்ணன் சொன்னதாக விளக்கப் படுவது. ரொம்ப பிரபலமான இந்த பாசுரத்திற்கு எமக்கு தெரிந்த அறிஞரொருவர் விளக்கமளித்தார்!
செய்யும் காரியத்திற்கு பலன் இல்லாது எப்படி போகும்? படிப்பதின் பலன் அறிவின் வளர்ச்சி! இன்னா இப்பகல் செய்தால் அதுவே முற்பகலில் வந்துடும் என்று வள்ளுவர் சொல்கிறார்.
பலனை எதிர்பார்க்காமல் யாரும் காரியம் செய்வதில்லை. இதைச் செய்தால் இது நடக்கும், நடக்கணும் என்றுதானே எல்லாரும் காரியம் செய்யறோம். அது வெற்றியடைகிறதா தோல்வியில் முடிகிறதா என்பது நமது கையில் முற்றிலும் இல்லை என்பது உண்மைதான்.
ஆகப் பலனை எதிர்பார்த்து தான் காரியம் செய்கிறோம். அப்போ கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதில் ஆழம் இல்லாது போகிறது.
அப்போ அந்த பாசுரத்திற்கு என்னதான் பொருள்! காரியத்தை செய்! பலன் நிச்சயம் கிடைக்கும்! ஏனெனில் பலன் இல்லாத காரியம் என்று ஒன்று இல்லை! ஆனால் பலனில் உரிமைக் கோராதே! பலன் கிடைக்காது போகலாம் என்பதற்காக காரியத்தினைச் செய்யாமல் இருப்பதற்கும் உனக்கு உரிமையில்லை! என்பதாக அவ்வறிஞர் கூறினார்.புத்தகம் ஒன்றை எழுதுகின்றேன். அதன் பலன் நிச்சயம் கிடைக்கும். பலரும் அதைப் படிப்பார்கள். புகழ்வார்கள்! இகழ்வார்கள்! எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இதன் மூலம் பணமும் பொருளும் கூடக் கிடைக்கப் பெறும். ஆக பலன் இல்லாது போய்விடாது.
நிற்க. இன்னிக்கு எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் பலனாகக் நாம் கருதுவது பெரும்பாலும் பைசாதான்! இதைச் செய்தா காசு கிடைக்குமா? இப்படித் தான் பலரும் கேட்கின்றனர்.
தமிழ் தமிழென்று சுத்தறியே பைசாக்கு பிரயோசனமுண்டா எனப் பலரும் கேட்பதுண்டு. பைசாக்கு பிரயோசமானக் காரியம்தான் செய்யவேண்டும் என்ற எண்ணம் பரவி நிற்கிறது. ஆனால் பலன் பைசாவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிரச்சனை பலனில் பற்று ஏற்படுகிற போது வருகிறது. அதன் பலனாய் உரிமைக் கோரச் சொல்கிறது.
பலனில் உரிமை அதுவே பதிப்புரிமை என்று கூடச் சொல்லமோ!
பதிப்பில் உரிமைக் கோரத் துவங்குகிற போது என்னைத் தவிர யாருக்கும் இதனைப் பதிப்பிக்க உரிமையில்லை அல்லது இதைப் பதிப்பிக்க எமது முன்னனுமதி அவசியம் பெற வேண்டும் என்றெல்லாம் இது விரிவடைகிறது.
ஆக செய்யும் செயலின் பலன் நிச்சயம் கிடைக்கும். அதை நீ செய்தாய் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால் உரிமை உனக்கில்லை எனக் கருதிச் செய்! கண்ணன் இதைத் தான் கூறுகிறான் என்பது அவ்வறிஞரின் வாதம்.