Archive for August, 2007
சிபிஃலையும் உளரல்..
இங்க உளருவது பத்தாதுன்னு அடுத்து சிபிஃலையும் உளரத் துவங்கியாச்சு! பொழப்பே மாறிடும் போலத் தெரியுது.. முதல் கட்டுரை..
முன்னாடி குனு இணைய தள தமிழாக்கத்தை அதுல பதிவேத்தறத்து முன்னாடி திண்ணைக்கு அனுப்பலாமேன்னு ஒரு கட்டுரை அனுப்பினேன். அறிவு சார் சொத்து எனும் அபத்தம்
இங்கேயெல்லாம் இனி மேலும் உளரும் வாய்ப்புக் கிடைச்சா இதுக்கு பின்னூட்டம் எழுதி புதுப்பிக்கறேன்…
திறந்த வட்டு – திறக்குமா மனசு?
போப்பா! நீ சொல்றது எல்லாம் சரிதான்! அஞ்சுல வளைஞ்சுருக்கணும்! இப்பொ அம்பது ஆச்சு! வளையுமா? எனக்கு மட்டும் வளைஞ்சா போதுமா! அம்மாக்கு, அப்பாக்கு… ஏன் தாத்தாக்கு கூட!
தம் அடிக்கறதைக் கூட விட்டுடலாம் போலிருக்கு… இந்த விண்டோஸ்! ரொம்பக் கஷ்டம்! அந்த அளவுக்கு பய நம்மள மயக்கிப் புட்டான் மயக்கி! திருட்டுத் தனந்தான் பண்றேன்னாக் கூட திருந்த மனசு ரொம்ப சிரமப் படுது! அப்பப்பா!
ம்ம்ம்… என்ன செய்ய ? மறுவாழ்வு முகாமெல்லாம் நடத்தி மெதுவா மாத்துவாங்களே அத மாதிரி நீங்க ஏதாச்சும் விண்டோசுலேர்ந்து குனுக்கு போக வழி வச்சிருக்கீங்களா? சிணு.. சிணுத்தான் அச்சு!
பூஃ! இவ்ளோதானா! திறந்த வட்டுன்னு ஒரு திட்டம்… குனு/ லினக்ஸில் பொதுவா பயன்படுத்தற பயன்பாடுகளில் எதெதுக்கெல்லாம் விண்டோஸ் வகையும் இருக்கோ அதை எல்லாம் தொகுத்து ஒரு வட்டுல போட்டுத் தராங்க!
அலுவகப் பயன்பாடான ஓபன் ஆபீஸ் , பயர்பாஃக்ஸ் உலாவி, அரட்டைக்கு பிட்கின், கோப்புகளைச் சுருக்க 7-சிப், மடல் வாங்கியான தன்டர்பேர்ட், படம் வரைய கிம்ப், வரைகலைக்கு இன்க்ஸ்கேப், முப்பரிமாணத்துக்கு பிளெண்டர், சாதாரணமா தட்டெழுத நோட்பேட்2, ஒலித்தொகுப்புக்கான அடாசிடி, குட்டிப் பசங்களின் சுட்டித் தனத்துக்கான டக்ஸ்பெயிண்ட், கோப்புகள் பரிமாற பைஃல்சிலா, நெவர்பால் போன்ற விளையாட்டு, அண்டம் காட்டும் செலஸ்டியா.. ஹு…ஹு.. ஹு..
டேய் டேய்… போதுண்டா! என்ன நான் கேட்டா நீ ஏதோ கல்யாணச் சாமான் பட்டியல் மாதிரி ஒப்பிக்கற! என்றான் அச்சு!

ஹு.. ஹு.. ஹு.. இதையும் தாண்டி பட்டியல் இன்னும் நீளுதுன்னு சொல்றேன்!
டேய் நிஜமாவா சொல்றே!
“ஆமாம் ஆமாம்! இதெல்லாம் பழகிட்டா அப்பறம் அடில என்ன இயங்கு தளம் இருக்குதுங்கற கவலை விட்டுது பாரு! மாத்தினா உடனே பழகிடலாமே!” என்றான் கிச்சு!
டேய் டேய்! எனக்கொன்னு வாங்கிக் கொடுடா! குடும்பதோட இந்த விண்டோசுக்கு மொத்தமா சீக்கிரமா முழுக்கு போட ரொம்ப உதவியா இருக்கும்!
தரேன் தரேன்! இதோ என்று தன் தோள் பையிலிருந்து வட்டொன்றை எடுத்து நீட்டியதோடு..
ஆனா ஞாபகம் வச்சுக்கோ! இலக்கு கூடிய சீக்கிரம் குடும்பத்தோட விண்டோசுக்கு முழுக்கு! என எச்சரிக்கை சங்கும் ஊதினான்…கிச்சு
எது ஊதியம்?
அதெப்படி.. என்னால ஆன பொருள் இது.. என் உடல் பொருள் ஆவி எல்லாம் கொடுத்து செய்துருக்கேன்! அடுத்தவன் சுரண்டறதுக்கு அறவே இடம் கிடையாது.. என் உழைப்புல அடுத்தவன் வாழறதா! கூடவே கூடாது!
இதை மாதிரி சுயநலத்தை, ஆளுமையை வளர்க்கறதா சொல்லி நிறைய பேர் வளர்த்து விடறதைப் பார்க்க முடிகிறது. ஏகபோகம், பதிப்புரிமை போன்ற சட்டங்கள் இன்றைக்கு நம்ம மக்களை இப்படி சிந்திக்க வைத்துள்ளன.
ம்ம்ம்.. என்னால ஆன ஒன்னு அதை என்னால மட்டுமே செய்ய முடியணும்னா, அது உண்மையிலேயே என்னால ஆனது தான்.. ஆனா அப்படி எதாச்சும் ஒன்னு இருக்கான்னு நானும் தேடிக்கிட்டிருக்கேன் இதுவரைக்கும் கிடைக்கல…
அடுத்தவனாலையும் செய்ய முடியும்னா நானா செய்துட்டாக் கூட உண்மையிலேயே என்னால் ஆனதாகாது.. சின்ன வார்த்தை விளையாட்டு.. என்னால ஆகல என் மூலமா ஆனது! ஒன்றன் காரணமாக இருந்ததன் காரணமாக என்ன கிடைக்கணுமோ அது நிச்சயம் கிடைக்கும்.. ஊதியமோ! வேற ஏதாச்சும் ஒரு வழியிலோ!
இந்த ஊதியத்தை விட பெரிய ஊதியம் ஒன்னு இருக்கு… வள்ளுவர் அதைத் தான் சொல்றார்…
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு