Archive for November, 2007
குனு + லினக்ஸ் = குனு/ லினக்ஸ்
யுனிக்ஸ் என்று அன்று பிரபலமாக வழங்கப்பட்டு வந்த இயங்கு தளம். கட்டற்று இருந்த அதன் கதவுகள் தாழிடப் பட்டன. பயன்படுத்துவோரின் அடிப்படைச் சுதந்தரத்தினைக் காட்டிலும் உருவாக்குவதாக மார்தட்டிக் கொள்ளும் சிலரின் உரிமைகளே மேலானது எனும் கருத்து வலிந்து திணிக்கப் பட்டது.
பெற்ற ஒரேக் காரணத்திற்காக பிள்ளைகள் பெற்றோருக்கு அடிமையென்றாகிவிடுமா? ஒரு முறை உருவாக்கிவிட்ட ஒரேக் காரணத்திற்காக உருவாக்கியவருக்கே உலகம் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என நினைப்பது நியாயமா?
இதனை நிச்சயம் எதிர்க்க வேண்டும். ஆனால் நியாயமான இவ்வாதங்களுக்கு தோள் கொடுக்க இதற்கு நிகராக ஒரு இயங்கு தளம் இருக்க வேண்டும். ஆனால் அது இதுவல்ல. ஆம் “குனு நிச்சயம் யுனிக்ஸல்ல”. “ஜி என் யூ இஸ் நாட் யுனிக்ஸ்” என்பதன் மீள் சுருக்கம் ஜி என் யூ. ஒரு சேர உச்சரித்தால் “குனு”! ஆஹா! பெயர் பிறந்தது. அடுத்து என்ன?
“நண்பர்களே! இவர்கள் சமூகம் தமது கைப்பாவையாக இருக்கத் திட்டமிடுகிறார்கள். இதனை நாம் ஏற்கவில்லை. இதற்கு மாற்றாக பயனர்களின் பரிபூரண சுதந்தரத்திற்கு வழிகோளும், இதற்கு நிகரான கட்டற்ற இயங்கு தளத்தினை உருவாக்க விழைகின்றோம். அதுவொன்றே இதற்கு நிரந்தரத் தீர்வு. இதன் பொருட்டு தங்களின் உதவி தேவை. நிதிமிகுந்தவர் காசுகள் தாரீர்! நிரலாளர்கள் நல்லுழைப்பினைத் தாரீர்! எப்பாடு பட்டேனும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!” மின்வழியே அறைகூவல் மடல் பறந்தது.
உதவ முன்வந்தோரின் துணையுடன் 1983 ம் வருடம் குனுத் திட்டம் துவக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பொருட்டு நிதி சேகரிப்பு முதலிய விவரங்களை கவனித்துக் கொள்ள மறு வருடம் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை அமைக்கப் பட்டது. நிரலாளர்கள் பலர் துணைபுரிய முன்வந்தனர். எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அயராத உழைப்பு. இயங்கு தளமொன்றின் இன்றியமையாத அனைத்துப் பாகங்களும் கிட்டத்தட்ட உருவாக்கப்பட்டு உருப் பெற்றன.
இயங்கு தளமொன்றின் முக்கிய பகுதியாகக் கருதப் படும் கருவினை “ஹர்ட்” எனப் பெயரிட்டு குனுத் திட்டம் உருவாக்கி வந்தது. வன்பொருள் வளங்களை பயனர்கள் இயக்கும் ஏனைய நிரல்கட்கு பகுத்து வழங்குவது இதன் முக்கிய பணியாகும். ஏனோத் தெரியவில்லை சிறியதாயினும் முக்கியமான இக்கரு குனுவின் மற்ற பாகங்களோடு பொருந்துவதில் சிக்கல் நிலவியது. வழிக் கிடைத்திட குனுத் திட்டத்தினர் விழிப்புடன் உழைத்து வந்தனர்.
பிஃன்லாந்து நாட்டின் ஹெல்ஸின்கி பல்கலைக் கழகம். லைனஸ் டோர்வால்ட்ஸ் எனும் மாணவர். கருவொன்றினை இயற்ற முடிவு செய்து கிட்டத்தட்ட இயற்றியும் விட்டார். ஆனால் நிறைவடையவில்லை. நுட்பம் தெரிந்த சிலருடன் பகிர்ந்து கொண்டால் சிக்கல் தீர வழிகிடைக்குமென வெளியுலகிற்கு வெளியிட்டார்.
அங்கேப் போய் இங்கேப் போய் கடைசியில் அது குனுத் திட்டத்தினருக்கும் வந்தது. ஆச்சரியம்! லினக்ஸ் கரு முழுமைப் பெற்றதுடன் ஹர்ட் பூர்த்தி செய்யத் தவித்தவிடத்தில் லினக்ஸ் கச்சிதமாய் பொருந்தியது. விடுதலையின் விடையாய் இதோ வந்துவிட்டேன் என உலகிற்குத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டது குனு/ லினக்ஸ் இயங்குதளம்.
விளைவு? டெபியன், ரெட்ஹாட், மான்ரிவா, சூசே, பெஃடோரா, உபுண்டு, குனுசென்ஸ் என இன்று நமக்கு கிடைக்கக் கூடிய கட்டற்ற மென் பொருட்களாலான இயங்கு தளங்கள் ஏராளம். எல்லாவற்றுக்கும் மேலாக, விரும்பினால் தாங்களேத் தங்களின் இயங்குத் தளத்தினை வடிவமைத்தும் கொள்ளலாம்.
இது மட்டுமல்ல! இந் நற்சிந்தனைகளால் உந்தப் பட்டு குனு/ லினக்ஸ் அல்லாத கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தும் பிஃரீ பிஎஸ்ட், நெட்பிஎஸ்டி, சோலாரிஸ் போன்ற பிற இயங்கு தளங்களும் இன்று கிடைக்கப் பெறுகின்றன. கிடைக்கும் மென்பொருளெல்லாம் கட்டற்று இருக்க வேண்டும். சமூகம் சிலரின் வஞ்சகப் பிடியிலிருந்து விடுபெற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் கட்டற்ற மென்பொருள் இயக்கம் இன்னும் வீறுகொண்டு இயங்கி வருகிறது.
மென்பொருளும் மற்ற பொருளும்…
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசை, பஞ்சனை, புத்தகங்கள் துவங்கி, நகர் வலம் வர உதவும் மோட்டார் வண்டி, மகிழுந்து, பேருந்தையும் சேர்த்து, அழகைக் காட்டிட அணிந்து மகிழும் ஆபரணங்கள் வரை அனைத்தும் மென்பொருளிடத்திலிருந்து ஒரு அடிப்படை விஷயத்தில் மாறுபடுகின்றன.
ஒத்தப் பொருட்ளின் நகலுற்பத்திக்காகும் நேரம்! சிலை ஒன்றினை உருவாக்கிவிட்டால் அதைக் கொண்டு அதனையொத்த இன்னொரு சிலையினை உடனே உற்பத்தி செய்து விட முடியாது. மகிழுந்தொன்றிலிருந்து அதனைப்போன்ற மற்றொன்றை அத்துனை சுலபமாக ஆக்கிவிட இயலாது. அச்சிடப் பட்ட புத்தகத்தின் மறு பிரதி எடுப்பதும் சற்று நேரம் பிடிக்கத் தான் செய்யும்.
ஆனால் மென் பொருள் அத்தகையது அல்ல. அதன் பிறவிப் பயனே நொடிப் பொழுதில் நிகழ்ந்துப் பரவும் அதன் நகலுற்பத்திதான். மென்தொழில் வந்ததன் விளைவு. ஆறு கமண்டலத்தில் அடங்கியதாய் கேட்ட மாயம் மறைந்து, எல்லாம் விரல் துண்டில் (யுஎஸ்பி) அடங்கும் அற்புதம் காண்கிறோம்.
உருவாக்கப் பட்ட மறு கணமே சாத்தியமாகும் நகலுற்பத்தியால் மென்பொருள் மற்ற பொருள்களோடு ஒரு விதத்தில் ஒப்பிடக் கூடாத ஒன்றாகவும் ஆகிறது. மென்பொருள் அதன் தன்மையால் எத்தகையதோ அதன் முழுப் பலன் அனைவரையும் போய்ச் சேர வேண்டும். அனைவரும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயல வேண்டும்.
இயல்பால் இத்தகைய மென்பொருளொன்று தங்கள் கையில் இருந்து அதனை தங்களின் அன்புக்குரிய ஒருவர் கேட்டால் என்ன செய்வீர்கள்? இன்று பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டு வரும் தனியுரிம மென்பொருட்ளைத் தாங்களும் பயன்படுத்தி வந்தால் தங்களுக்கு இது ஒரு தர்ம சங்கடமான நிலை!
அம்மென்பொருளின் உரிமத்துக்கு உட்பட்டு அதனை உணர்ந்து தாங்கள் வாங்கியிருந்தால், தங்களின் அன்புக்குரியவருக்கு அதனைக் கொடுக்கும் பட்சத்தில், நாமே ஒப்புக் கொண்ட ஒன்றை மீறுகிறோமே என்ற குற்றவுணர்வு ஒரு பக்கம்.
போட்ட ஒப்பந்தம் தான் முக்கியம். அதெல்லாம் கொடுக்க முடியாது போ! எனத் தங்களின் அன்புக்குரியவரிடம் சொல்லத் துணிந்தால் இத்துனைக் காலம் பழகிய பழக்கத்துக்கு ஆப்பு வைத்துவிடுமே என உறுத்தும் உள்ளுணர்வு! எதைத் தேர்வுச் செய்யப் போகின்றீர்கள்? மென்பொருளொன்றுக்காக அன்புக்குரியோரே இல்லாது இருப்பதையா?
உரிமத்தை உதறிவிட்டு, மீறிக் கொடுத்தால் நம் வருங்கால சந்ததிக்கு நல்ல உதாரணமாகத் திகழாத கைங்கரியம் செய்தவராகும் அவல நிலை. தனியுரிம மென்பொருள் இரு தலைக் கொல்லி. விடுதலைக்கு வழியிருக்க இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளமாக ஏன் துழல வேண்டும்? வழிதானென்ன?
அமேரிக்காவின் மாசாசூஸட்ஸ் தொழில்நுட்பப் பயிலகம். எழுபதுகளின் காலக் கட்டங்களில் மென்பொருளை படைத்துப் பகிர்ந்து நிறைவுடன் வாழ்ந்து வந்த சிறு குழுமம். கட்டற்ற மென்பொருள் அங்கே இயற்றப் படாத நியதியாக இருந்தது. கணினி நிறுவனங்களும் கட்டற்ற மென்பொருளையே பெரும்பாலும் விற்று வந்தனர்.
நிரலாளர்களும் தங்களுக்கிடையே பரஸ்பரம் ஒத்துழைத்து கூடித் தொழில் செய்து வந்தனர். அதில் ஆர்க்கும் விடுதலையிருந்தது. காட்சி மாற்றம். எண்பதுகளின் துவக்கம். கிட்டத்தட்ட கிடைத்த மென்பொருட்கள் அனைத்தும் பயனருக்கான அடிப்படைச் சுதந்தரங்களை மறுத்தன.
பகிர்ந்து வாழ்ந்து வந்த அச்சமூகத்தை சிலரின் பணத்தாசைக்காக குழித் தோண்டிப் புதைப்பதா? நாளை எல்லாம் மென்மயம் ஆகும் போது அம்மென்பொருள் இச்சிலர் வசம் இருத்தலாகுமா? குமுறிக் கொண்டிருந்தது ஒரு உள்ளம்.
கூடித் தொழில் செய்த அச்சமூகம் மீண்டும் உயிர் பெற வேண்டும். கூட்டுறவோடு கூடிய சமூக ம் சார்ந்த அணுகுமுறையுடன் மென்பொருளுற்பத்தி பெருகி அனைவரும் விடுதலைப் பெற வேண்டும் எனத் துணிவு கொண்டு, தமது பணித் துறந்து ரிச்சரட் ஸ்டால்மேன் துவங்கியதுதான் குனுத் திட்டம்.
பி.கு: சிஃபி தளத்தில் “விடுதலையை விரும்புவோம்” எனும் தலைப்பில் இயற்றி வரும் தொடர். அங்கே கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள் தென்பட்டதால், அங்கே பதிப்பிக்கப்பட்டவுடன் இங்கேயும் பதிப்பிக்கலாம் என முடிவு கொண்டு பதிப்பிக்கின்றோம். இதற்கு முன்பு வரை எழுதியவைகளுக்கான இணைப்புகளை சிபிஃயிலும் உளரல் பக்கத்தில் காணலாம். இக்கட்டுரைக்கான இணைப்பிற்கு இங்கேச் சொடுக்கவும்.