Archive for May, 2008
உபுண்டுவுடனான தேநீர் நேரம்…
நண்பர்களே,
உபுண்டு தமிழ் குழுமம் தமது மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறது. அத்தோடு உபுண்டு கைப்பிடி தோழர்கள் திட்டமும் துவக்கப்படவிருக்கிறது. ஹார்டி ஹெரானின் வெளியீட்டையும் இவற்றுடன் இணைத்து சிறப்பானதொரு மாலை நேர தேநீர் விருந்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: ஹோட்டல் உட்லேண்ட்ஸ், நாரத கான சபா, டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
தேதி: 31 மே 2008
நேரம்: மாலை 4.30 மணி
வாருங்கள். பிறரையும் வரவழையுங்கள். நினைவில் நிலைத்து நிற்கும் சிறப்பானதொரு மாலைப்பொழுதாக
இதனை ஆக்கிடுவோம்.
அகால மரணமும் இக்கால காரணமும்…
யாராச்சும் இறந்தா, நல்லா சிரிச்சு சிரிச்சு கல கலன்னு பேசிகிட்டு தான் இருந்தார்.. சாப்டுட்டு படுத்தவர் தான் எழுந்துக்கவேயில்லைன்னு துக்கத்துக்கு போன இடங்களில் கேட்பதுண்டு.
அவங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு ஆட்டோவுல கிளம்பினாரு! போற வழில ஆட்டோலயே உயிர் பிரிஞ்சிடுச்சுன்னு கூட கேட்டதுண்டு.
இப்படி அகால மரணமடைய தற்காலத்திற்கான புதிய காரணம் பரவி வருகிறது!
காய்கறி வாங்கறேன்னு கடத்தெருவுக்கு போனாரு! குண்டு வெடிச்சு இப்படி அநியாயமா செத்துட்டாரே!
சாமி கும்புடறேன்னு கோவிலுக்கு போனாரு! டைம் பாம் வெடிச்சு டமார்ன்னு போயிட்டாரே!
ஆட்டத்தை பார்க்கலான்னு ஸ்டேடியத்துல இருந்தாரு! குண்டு வெடிச்சதுல அநியாயமா உயிர் பிரிஞ்சு போச்சே!
தோழனை பார்க்க போறேன்னு டிரெயின் பிடிச்சவன்தான்! அப்பறம் திரும்பியே வரல! என்னாச்சோ எதாச்சோன்னு விசாரிச்சுதல யாரோ வச்ச குண்டுல பரிதாபமா இறந்துட்டாருன்னு சேதி மட்டும் வந்துச்சு…
இப்படி யாக்கை நிலையாமைக்கு எல்லாம் வல்ல இறைவன் பல காரணங்களை உண்டு பண்ணிக் கொண்டே இருப்பதால், செய்பவர்களும் அவ்விறைவனின் திருப்பெயரால் செய்வதாலோ என்னவோ, செய்தவர்களை கண்டிக்க தண்டிக்க திராணியற்று அரசும் இருப்பதால், இப்படி உங்களுக்கு எனக்கும் நேரும் முன்னரே, அறக்காரியங்களெல்லாம் அப்பறமா செய்யலாமுன்னு தள்ளிப் போடாம, நோய்வாய், மூப்பு என மரணத்திற்கு இறைவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயமான இயற்கையான காரணங்களில் குண்டு வெடிப்பும் ஒன்று என ஏற்கப் பழகிக் கொண்டு, இப்பவே நல்லக் காரியங்களை நித்தமும் செய்து வந்தோமேயானால் மரணத்திற்கு பின்னர் நற்கதி நிச்சயம்.
கணிமொழி – இளவேனிற் காலத்தின் இரண்டாம் இதழ்
இளவேனிற் காலத்தின் இரண்டாவது இதழை உங்கள் முன் படைப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகின்றோம். புத்தாண்டில் இம்முயற்சியை துவங்கிய எம்கரங்களுக்கு வலுவூட்டும் விதமாக அமைந்த வாசகர்களின் கருத்துக்களுடன் இம்மாத இதழ்
துவங்குகிறது.
யுனிகோடில் கோட்டை விட்டவற்றையும் ஆக வேண்டியதற்கான தமது
பரிந்துரைகளையும் நயம்பட நமக்கு, தமக்கே உரிய தனித்தன்மையுடன்
எடுத்துரைக்கும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இரமண்ராஜ்
அவர்களின் நீதிக்கு நீதி கட்டுரையுடன் தொடர்கிறது.
நிறுவலிலேயே நின்றுவிடும் பலரது குனு லினக்ஸ் ஆவலுக்கு புத்துயிர்
ஊட்டும் விதமாக அமைந்துள்ள உபி (Wubi) மென்பொருள் கொண்டு
விண்டோஸுக்குள்ளிருந்தே உபுண்டு இயங்கு தளத்தினை நிறுவும் முறையை வண்ணத்
திரைக்காட்சிகளுடன் இலாவகமாக எடுத்துரைத்திருக்கிறார் அப்துல் ஹலீம்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் மாணவர் இவர்.
நிரலாக்கப் பழகும் போதே அந்நிரல் பன்மொழித்தன்மை வாய்ந்ததாக இருப்பதற்கான
எளிய அறிமுகத்தை தரும் பாரதியின் கெட்டெக்ஸ்ட் அறிமுகம், தங்கமணி அருணின்
ரெட்ஹாட் பொதி மேலாண்மைத் தொடர்ச்சி, எமது யுனிக்ஸ் ஆயத்தம் ஆகியன
தொடர்ந்து தம்மை வாசிக்கும் படி உங்களிடம் விண்ணப்பித்து நிற்கின்றன.
இந்திய சந்தைகளை தட்டும் நியோ பிரி ரன்னர் பற்றிய முக்கியமான செய்தியை
கொண்டுள்ள அக்கம் பக்கத்தை படிக்க மறவாதீர். காரணத்துடன் பிடிஎப் கோப்பு
தாமதப்படுத்தப் பட்டுள்ளது. இணையத்தில் அனைவரும் வாசித்த இரண்டொரு
நாட்களில் கிடைக்கப்பெறும்.
தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இம்மாத இதழ் பற்றிய தங்களது
மேலான கருத்துக்களை மறவாது மடலனுப்பவும். தங்களுடைய கட்டுரைகளையும்
இவ்விதழுக்கு அணிகலனாய் அடுத்த மாதம் எதிர்பார்க்கிறோம்.
பார்க்க படிக்க சொடுக்குக : http://kanimozhi.org.in